Untitled Document
 
  Quick Links
ஆன்மீகம்
ஜோதிடம்
ஜாதகம்
நட்சத்திரங்கள்
பஞ்ச பூதங்கள்
சித்தர்கள்
சித்தர்களின் ஆட்சி
நவக்கிரக கோவில்கள்
குரு
முத்திரைகள்
கண்திருஷ்டி
 
    வள்ளலார்

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிபெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

கடைவிரித்தேன் கொள்வாரில்லை கட்டிவிட்டேன் அத்தனையும்

வள்ளலார் :

இராமலிங்க அடிகள்

19ஆம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் வாழ்ந்த சமயத் தலைவர்களில் தலைசிறந்தவர் இராமலிங்க அடிகளாவார். 1823 அக்டோபர் 5ல் சிதம்பரத்துக்கு அருகிலுள்ள மருதூரில் ராமய்யா பிள்ளை, சின்னம்மையார் தம்பதிக்கு கடைசி மகனாக அவர் பிறந்தார்.

ஆன்மீக வாழ்க்கையில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்த அவர் 1858ல் வடலூருக்கு அருகில் கருங்குழி என்ற இடத்திற்கு சென்றார். பின்னாளில் அவர் வடலூரில் இருப்பிடத்தை அமைத்துக் கொண்டார். அவரது தெய்வீக ஆற்றல் பதினோராவது வயதிலேயே வெளிப்பட்டது. சாதிபேதமற்ற சமுதாயத்தை உருவாக்கும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்ட தமது கருத்துக்களை பரப்புவதற்காக 1865ல் சமரச சன்மார்க்க சங்கத்தை நிறுவினார். மக்களிடையே அன்பையும் கருணையையும் போதித்தார். அவர் திருஅருட்பா என்ற நூலை இயற்றினார். அவரது மற்ற இலக்கியப் படைப்புகளில் 'மனுமுறை கண்ட வாசகம்','ஜீவகாருண்யம்' என்ற நூல்களும் அடங்கும். பாமர மக்களும் எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் அவரது மொழி நடை மிகவும் எளிமையாகவே இருந்தது.

1870ல் வடலூருக்கு மூன்று மைல் தொலைவிலிருந்த மேட்டுக்குப்பம் என்ற இடத்துக்கு சென்றார். அங்கு 1872ல் சத்திய ஞான சபையை கட்டத் தொடங்கினார். கடவுளை ஜோதி வடிவமாக வழிபடலாம் என்று அவர் மக்களுக்கு எடுத்துக் கூறினார்.

வள்ளலார் ஆரம்ப காலகட்டத்தில் முருகனைத் தொழுது வணங்கியவர். சுப்ரமணியம் என்பது பற்றி அவர், “ சுப்பிரமணியம் என்பது என்னை? நமது புருவ மத்தியில் உருட்சியாய் ஆறு பட்டையாய் உருட்சியுள்ள ஒரு மணிப் பிரகாசம் பொருந்தியிருக்கின்றது. இந்த ஜோதி மணியை ஷண்முகமென்று பெரியோர்கள் சொல்லுவார்கள். இதன்றி, நமது மூலாதாரத்திற்கு மேல் மூன்றிடந்தாண்டி விசுத்தியாகிய இருதய ஸ்தானத்தில் இடது புறத்தில் ஆறு தலையுடைய ஒரு நாடி இருக்கின்றது. இதைச் சுப்பிரமணியம் என்று சொல்லுவார்கள். இந்தத் தேகத்திலுள்ள ஆறறிவும் ஒருங்கே சேர்ந்த சுத்த விவேகமென்பதையும் ஷண்முகம் என்பார்கள். ஆறு ஆதாரங்களில் உள்ள ஆறு பிரகாசத்தையும் ஷண்முகம் என்பார்கள். ஆயினும் சர்வ தத்துவங்களினது அந்தத்தில் உள்மணிக்கப்பால் சாந்த நிறைவாயுள்ள ஆறுதலாகிய சுத்த ஆன்ம அறிவான உள்ளமே சுப்பிரமணியம்………”

- என்று சுப்பிரமணிய தத்துவத்தைப் பற்றி விளக்கி இருக்கிறார் வள்ளலார்.

நமது காலத்திற்கு சற்று முன்னர் வாழ்ந்த வள்ளலார் (வடலூர் ராமலிங்க சுவாமிகள்) 1874ம் ஆண்டு ஜனவரி 30ம் தேதி நள்ளிரவில் தனது அறையில் உள்ளே சென்று தாளிட்டுக் கொண்டவர் திரும்பி வரவில்லை. அறையின் உள்ளே இருந்த விளக்கை வெளியே கொண்டு வந்து வைத்த அவர், தனது சீடர்களிடம் யாரும் அறையைத் திறக்க வேண்டாம் என்று அருளி விட்டு உள்ளே சென்றார். அவர் ஜோதியாக ஆனாரா, காற்றிலே கலந்தாரா என்பது தெரியாவிட்டாலும், அவர் மரணத்தை வென்ற மாபெரும் ஞானி என்பதை உலகம் உணர்ந்தது.

வள்ளலார் பற்றி அறிய தென் ஆற்காடு கலெக்டர் ஒரு டாக்டருடன் சித்திவளாகம் விரைந்தார். உடல் சிதைந்து நாற்றம் எடுக்கும் என்று நம்பிய டாக்டர் அறைக்குள் நுழைந்தவுடன் திகைத்தார். பச்சைக் கற்பூர மணம் கமழ்ந்தது! அங்கிருந்த சீடர்களிடம் வள்ளலார் பற்றி நன்கு விசாரித்து அறிந்த கலெக்டர், அவரது மாபெரும் ஆன்மீக உயர்வைப் போற்றியதோடு தன் பங்கிற்கு இருபது ரூபாயை அளித்தார்.

1878ல் சவுத் ஆர்காட் கெஜட்டில், அறைக்குள் நுழைந்து தாளிட்டுக் கொண்டவர் திரும்பி காணப்படவில்லை என்று குறிப்பிட்டு அவரைப் பின்பற்றுவோர் அவர் கடவுளுடன் ஒன்றாகி விட்டார் என்று நம்புவதையும் குறிப்பிட்டார் ஜே.ஹெச் கார்ஸ்டின். 1906ல் டபிள்யூ. பிரான்ஸிஸ் ஐ.சி.எஸ் சவுத் ஆர்காட் கெஜட்டில் வள்ளலார் மறைந்ததை விளக்கி அதிசயப்படுகிறார்!

142 வருடங்களாகஅணையாத அடுப்பு: வள்ளலார் 1867, மே 23ல் இங்கு தருமச்சாலை அமைத்து அன்னதானத்தை துவக்கினார். இதற்காக அவர் ஏற்றி வைத்த அடுப்பு, தற்போது வரையில் அணையாமல் எரிந்து கொண்டிருக்கிறது. இது 21 அடி நீளம், 2.5 அடி அகலம் மற்றும் ஆழம் கொண்டது.

இந்த அடுப்பை அணைக்கவே கூடாது என்பதற்காக, இங்கு தீப்பெட்டியே வாங்குவதில்லை. இரவு வேளையில் சமையல் செய்யாத வேளையிலும் கூட, நெருப்புஅணையாமல் இருக்க, பணியாளர் ஒருவர் விறகுகளை இடுவார். அன்னதானம் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து, 142 ஆண்டுகளாக தொடர்ச்சியாக பக்தர்களுக்குஅன்னதானம் வழங்கப்படுகிறது. உணவுதயாரிக்க அரிசி, உப்பு பக்தர்கள் மூலமாகவந்துவிடுகிறது.

தினமும் காலை 6 மற்றும் 8 மணி, பகல் 12, மாலை 5 மற்றும் இரவு 8 மணி என ஐந்து முறை அன்னதானம் நடக்கிறது. விசேஷ நாட்களில் நாள் முழுவதும் அன்னதானம்நடக்கும்.

திருக்காப்பிட்ட அறை : வள்ளலார் வடலூர் அருகில் மேட்டுக்குப்பத்திலுள்ள சித்தி வளாகத்தில், 1873 அக்டோபரில் சன்மார்க்க கொடியேற்றி, அடியார்களுக்கு பேருபதேசம் செய்தார். சில நாட்களுக்குப்பின் சித்தி வளாகத்தில் ஒரு தீபம் வைத்து, அந்த ஜோதியை

இறைவனாக வழிபடும்படி அறிவுறுத்தினார். 1874, தை 19ல், சித்தி வளாகத்திலுள்ள அறைக்குள் சென்றவர், அருட்பெருஞ்ஜோதியுடன் இரண்டறக் கலந்தார். இந்த அறை, "திருக்காப்பிட்ட அறை' எனப்படுகிறது.

தைப்பூசம் முடிந்த இரண்டாம் நாளன்று இந்த அறை திறக்கப்படும். அன்று சத்திய ஞானசபையில் இருந்து, வள்ளலார் இயற்றிய திருஅருட்பாவை ஒரு பல்லக்கில் எடுத்துக்கொண்டு, திருக்காப்பிட்ட அறைக்கு கொண்டு செல்வர்.

மதியம் 12 மணிக்கு அறை திறக்கப்படும். மாலை 6 மணி வரையில் பக்தர்கள் ஜன்னல் வழியாக, வள்ளலார் சித்தியடைந்த அறையைத் தரிசிக்கலாம்.

 
Untitled Document


 

  Cell : +91 94860 63744
                  97861 95125
  saimaharishi10@gmail.com
  saimaharishi10@yahoo.com

 
 

Flag Counter